உணர்வுகள்

பகவத் கீதை புத்தகத்தை எடுத்துக் கொண்டு என்னுடைய “ஃபேவரிட்” சாய்வு நாற்காளியில் சென்று அமர்ந்துக் கொண்டேன். நாற்காளிக்குப் வலதுப் பக்கத்தில் கைக்கெட்டும் தூரத்தில் ஒரு குறிப்புப் புத்தகமும் பேனாவும் இருந்தது. இடதுப் பக்கத்தில் TV ரிமோட்டும் ஒரு சின்ன பாட்டிலில் தண்ணிரும் வைக்கப்பட்டிருந்தது. எனக்கு எல்லாமே கைக்கெட்டும் தூரத்தில் இருக்க வேண்டும். இதனால் நான் எழுந்திருப்பதற்கு சோம்பேறித்தனம் படுகிறேன் என நினைக்க வேண்டாம். எனக்கு எல்லாமே “ஆர்கனைஸ்”டாக இருக்க வேண்டும்.

என்னுடைய மூதாதையர்களுக்கான வருடக் கைங்கரியங்களை இன்று நானும்  என் மனைவியும் செய்து முடித்தோம். செய்து வைத்த வாத்தியார் கொண்டு வந்த இரும்பாலான ஓமக்குண்டத்தை அவருடைய காரில் ஏற்றி வைத்து, அவரை வழி அனுப்பி விட்டு இப்போது தான் உள்ளே வந்தேன். ஒரே களைப்பாக இருந்தது. உள்ளே என் மனைவி பாத்திரங்களை எல்லாம் எடுத்து சுத்தம் செய்து அடுக்கிவைக்கும்  சத்தம் கேட்டது. அவளுக்கு அப்போதைக்கு அப்போதே எல்லாம் நடந்து விட வேண்டும். இந்த வயதிலும் ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார மாட்டாள். இது அவளுடைய சுபாவம்.

TV-யை போட்டுப்பார்த்தேன். Sun TV-யில் ஏதோ மெகா சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அடுத்து KTV-யில் கூட்டமாக ஆணும் பெண்ணும் ஆடி(குதித்து)க்கொண்டிருந்தார்கள். மாமாங்கமாய் தமிழ் திரைப்படம் எடுக்கிறவர்கள் இதையே தான் எடுக்கிறார்கள். இதையும் மக்கள் எப்படித்தான் ரசிக்கிறார்களோ? அடுத்து காமெடி சானலில் ஒரே சிரிப்பலைகளாக இருந்தது. வசனம் பேசி முடிப்பதற்கு முன்னமே சிரிப்புப்பதிவை மிக்ஸ் செய்வதால் பாதி சமயம் வசனமே புரிவதில்லை. அப்படியே புரிந்தாலும் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று யோசிக்க வைக்கிறது. வெறுப்புடன் ஒவ்வொரு சானலாக மாற்றினேன். இரண்டு மூன்று ஆங்கிலப் பட சானலில் சண்டையும் கார் “சேஸிங்கும்” இருந்தது. News சானலில் காலை ஒளிபரப்பியதையே மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். எனக்கு பிடிக்காத சானல் sports என்பதால் அதைத்தவிர்த்து ஏனைய சானல்களுக்குத் தாவினேன். பார்க்கும் படி ஒன்றுமே இல்லை. பொட்டென்று  TV-யை அனைத்து விட்டு, பகவத் கீதையைப் எடுத்து வைத்துக் கொண்டேன். கூடவே குறிப்புப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டேன்.

குறிப்புப் புத்தகம் எதற்கு என்று கேட்கறீர்களா? முன்னைப் போல் எனக்கு ஞாபக சக்தி அதிகம் இல்லை. படித்ததெல்லாம் மறந்து விடுகிறேன். அதற்காக தான் இந்த குறிப்புப் புத்தகம். இதோ, பாருங்களேன் – முதல் அத்தியாயத்தில் சஞ்சயன் திருதிராட்சனுக்கு போர் நிலவரங்களை கூறுவதும், அர்ச்சுனன் போர் செய்ய மறுப்பதும் குறித்து உள்ளேன். இரண்டு மற்றும் மூன்றாம் அத்தியாயத்தில் கண்ணன் அர்ச்சுனனக்கு அவன் கடமைகமளை உணர்த்துவது, நாலாம் அத்தியாயத்தில், தானே அணைத்திலும் இருப்பதாகவும், அதர்மம் ஓங்கும் போது தான் தோண்றுவதாகவும், ஐந்தாம் அத்தியாயம் பிறப்பைப் பற்றியும், ஆறாம் அத்தியாயம் துறவிகளின் வாழ் முறைகளையும் கூறுகின்றன. இதையெல்லாம் குறித்து வைத்துள்ளேன். இப்புத்தகத்தை எத்தனை முறைப் படித்தாலும் மூளையில் மட்டும் ஏறுவதாக தெரியவில்லை. அதனால் தான் இந்த குறிப்பெழுதும் பழக்கம். நான்கவது முறையாக இன்று பகவத் கீதையின் ஏழாவது அத்தியாயத்தைப் பிரித்து வைத்துக் கொண்டேன். ஏழாவது அத்தியாயம் இறைவனை அடைவது பற்றியது. இதை விஞ்ஞான ரீதியாக புரிந்துக்கொள்வது சற்றுக் கடினம் என்றாலும், மிக நுனுக்கமாக படித்து புரிந்துக்கொண்டால், விளக்கி விடலாம். அதனால் தான் குறிப்புகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

“ஏண்ணா, கொஞ்சம் வீட்டைப் பார்த்துக்கோங்கோ, நான் வாஹினி வீடு வரைக்கும் போய்விட்டு வருகிறேன். அவளுக்கு ஊறுகாய் போட சொல்லித்தர வேண்டும். இன்றைக்கு அதற்காகவே லீவு போட்டிருக்கிறாள்…  நீங்க அப்படியே தூங்கிடாதிங்கோ. தூக்கம் வந்தா கட்டிலில் போய் படுத்துக்கோங்கோ. இரண்டரைக்கு ராமு வருவான் காபி போட்டுத் தரச்சொல்லுங்கோ. அப்படியே திவச பக்ஷ்ணத்தை எடுத்துக்கொள்ள சொல்லுங்கோ… என்ன காதில் விழுந்ததா?”, என் சஹதர்மினி அடுக்கிக்கொண்டே வாசல் வரையில் போய்விட்டாள். நான் காதில் வாங்கிக்கொள்வதற்கோ, அல்லது பதில் சொல்வதற்கோ அவள் அவகாசமும் கொடுக்கவில்லை, அதை எதிர்ப்பார்க்கவும் இல்லை.

“இவ்வளவு நேரம் வேலை செய்தது போதுமே. சற்று நேரம் போய் படுப்பது தானே! உடனே வாஹினியை போய் பார்க்கவில்லை என்று யார் அழுதார்கள்? நாளைக்கு கை வலி கால் வலி என்று படுத்தால் உனக்கு தானே கஷ்டம்”.

அவள் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. வாசல் கதவு மூடும்போது ஏற்படும் இரும்போடு இரும்பு உரசும் சத்தமே எனக்கு பதிலாக வந்தது. இனி அவள் மூன்றுக்கோ நான்கு மணிக்கோ தான் வருவாள்.  அவளை யாரும் கேட்கவும் முடியாது. கேட்டால் “நான் தானே உழைக்கிறேன் உங்களுக்கு என்ன கஷ்டம்? நான் படுத்தால் அப்போது கேளுங்கள்” என்று விதண்டாவாதம் பேசுவாள். இவள் இப்படியே வளர்ந்து விட்டாள். ஐம்பது வயதிற்கு மேலான இவளை இனி மாற்றுவது கடினம். என்னுடைய தாய் இப்படியே இருந்ததால் அவளைப்பார்த்து இந்த பழக்கம் இவளுக்கும் தொற்றிக்கொண்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். இளவயதிலேயே திருமணமாகி எங்கள் வீட்டுக்கு வந்து விட்டதால், இவளுடைய பழக்க வழக்கங்களை எங்களைப்போலவே மாற்றிக்கொண்டு விட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

என் மனம் பகவத் கீதையில் லயிப்பதாக தெரியவில்லை. எப்போதும் போல் ஒருவித தனிமையை உணர ஆரம்பித்தேன்.  இது இன்று நேற்றல்ல, முப்பத்தைந்து வருடமாக, ஒரு இனம் தெரியாத உணர்வை, ஒரு வித ஏக்கத்தை உணர்கிறேன். இதை விவரிப்பது கடினம்.  பல முறை தனிமையாக ஆக்கப்பட்டு விட்டேனோ என்ற பயம் ஏற்படுகிறது. என்னைவிட்டு எல்லோருமே போய்விட்டதுப் போன்று ஒரு உணர்வு. சரியாக சொல்லத்தெரியவில்லை. மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் விவரிக்க முடியாத இந்த உணர்வு இருந்துக் கொண்டே இருக்கிறது. பல முறை நானே இது ஒரு கற்பனை தான் என்று என்னைத் தேற்றிக்கொண்டது உண்டு. ‘ஆனால் அப்படி சொல்லமுடியாது, நான் இருப்பது நிஜம். உன்னை வருத்தாமல் இருக்க மாட்டேன்’ என்று சூளுரைப்பதுப் போல் இது வெளிப்படும். சாதரணமாக தனிமையில் இருக்கும் போது தான் இது தோண்றும். ஆனால் சிறிது வருடமாக, எல்லோரும் கும்பலாக பேசிக்கொண்டிருக்கும் போதுக் கூட திடீரென்று என்னையும் அறியாமல் ஏதோ கற்பனை உலகத்திற்கு சென்றுவிடுவேன். அப்போதெல்லாம் ஒரு வித குற்ற உணர்ச்சி தோண்றும். அதைத் தொடர்ந்து மறுபடியும் எல்லோரும் என்னை தனிமையில் விட்டு விட்டார்களோ என்று நினைப்பேன். ‘ஒரு வேளை நான் இங்கிருந்துப் போய்விட்டால் இவர்கள் கவணிப்பார்களா? என்னை போக வேண்டாம் என்று தடுப்பார்களா? நான் இருப்பது இவர்களுக்கு உன்மையிலேயே தெரியுமா அல்லது மற்றவர்களுக்காக என்னைப் பொறுத்துக் கொள்கிறார்களா’ என்றெல்லாம் நினைப்பேன். பிறகு நானே ‘சீ இது என்ன விபரிதமான கற்பனை’ என்றுத் தேற்றிக்கொள்வதும் உண்டு.

அப்படி ஒன்றும் கஷ்டப்படும் வாழ்க்கை அல்ல என்னுடையது. பகவத் கீதையில் கூறியதுப் போல் என் கடமையை மறக்காமல் செய்து விட்டேன். பலனை என்றுமே எதிர்ப்பார்க்கவில்லை. மூத்தவளுக்கு கல்யாணம் செய்து இங்கு சிட்னியிலேயே குடுத்தனமும் வைத்துக்கொடுத்தாகி விட்டது. இதோ அவளுக்கும் இரண்டு மகன்கள். சந்தோஷமாகத் தான் இருக்கிறாள். அடுத்தவன் திருமணம் முடிந்து, குழந்தை பிறக்கவில்லையே என்று ஏங்கும் தறுவாயில், அவன் மனைவி, மூன்று வருடம் கழித்து இப்போது நிறைமாத கர்பிணி யாக இருக்கிறாள். மூன்றாவது மகனுக்கும் நிச்சயம் முடிந்து விட்டது. ஆஸ்திரேலியா ‘விசா’ வந்தவுடன் அவனுக்கும் திருமணம் முடிந்து விடும். ஆக என் கடமைகளை செய்து விட்டேன் என்றே சொல்லவேண்டும். அனைவருக்குமே இந்திய வழக்கப்படி, எவ்வித மாற்றமும் இல்லாமல் செய்து விட்டேன். அதேப் போல் என் பெற்றோர்கள் உயிருடன் இருந்த வரையில் சண்டையோ கூச்சலோ, என்னோடே வைத்துக்கொண்டு காப்பாற்றி விட்டேன். என் மனதிற்கு தெரிந்த வரையில் எவ்வித குறையும் வைக்கவில்லை. பெரிய பணக்காரனாக வாழ்கிறேன் என்று சொல்லமுடியாது. அதற்காக கஷ்டப்படுகிறேன் என்பதும் கிடையாது. கடைசிக் காலத்திற்குத் தேவையான வரும்படி பாங்கிலும் “Mutual funds” லும் உள்ளது. சொந்த வீடும் காரும் இருக்கிறது. குறையென்று ஒன்றும் கிடையாது. இந்தியாவில் உள்ளதுப் போல் வேலைக்காரர்களெல்லாம் இங்கு கிடையாதென்பதால் நம் வேலையை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும். இது முப்பது வருடமாக பழகிவிட்டதால் ஒரு குறையாக தெரியவில்லை.

இப்படியிருக்க ஏன் இந்த வெற்றுத்தன்மை? ஏன் இப்படி ஒரு ஏக்கம்? எதற்காக என் மனம் ஏங்குகிறது? இதைத் தான் பட்டினத்தார் “நிம்மதியற்று தடுமாறும் மனம்” என்கிறாறோ? அல்லது பகவத் கீதையில் கூறியதுப் போல் நான் செய்த விணையின் பயன்தான் இதுவோ? உடலில் வியாதி கிடையாது. ஈட்டிய பொருளில் குறையில்லை. நாளைப் பற்றி கவலை கிடையாது. ஆஸ்திரேலிய வாழ்க்கை சூழ்நிலையைப் பற்றி கூறத்தேவையில்லை! சுவாசிக்க தூசற்ற காற்று, குடிக்க சுத்தமான தண்ணீர், சுகாதாரமான உணவு வகைகள், மாசற்ற மக்கள், சுற்றுப்புறத்தவர்கள்; இதில் எதிலும் குறையில்லையே! இதைவிட தெளிவான வாழ்க்கை யாருக்கு அமையும்? இந்தியாவில் இப்படி ஒரு வாழ்க்கைக்கு எத்தனைப் பேர் அலைவார்கள்? ஆனால் எனக்கோ எல்லாம் சொல்லி வைத்ததுப்போல் அமைந்து விட்டது. ஆயினும் இந்த மனக்குறையை ஏன் பகவான் என்னிடம் வைத்துள்ளான்?

நான் சிறு வயதில் இருக்கும் போது, என்னுடைய சிற்றப்பா கூறுவார். “உங்கள் குடும்பம் ஒரு முன்னோடியானது. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், இரவு உணவிற்கு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறீர்களே – அந்த ஒரு வித ஒற்றுமையும், சந்தோஷமும் யாருக்கும் வரவே வராது!”. இது என்னவோ உண்மைதான். அப்போதெல்லாம் என் தந்தை ஒருத்தர் சம்பளத்தில் குடும்பம் நடத்துவதே பெரும் பாடாக இருக்கும். முதல் தேதி எப்போது வரும் என்று ஏங்கும் நாட்கள் அது. நடுவில் வேலையில்லையென்றால் கடனும் கஷ்டமும் அதிகரிக்கும். ஆனால் இரவு உண்ணும் போது மற்றும் அணைவரும் ஒன்றாக அமருவோம். ஒரே கலகலப்பாக இருக்கும். பல முறை குறைவான உணவு இருக்கும் போது, மொத்தமாக கலந்து, என்னுடைய தாய் அனைவருக்கும் கையில் போட்டு சாப்பிடும் அந்த சம பங்கீட்டின் சுகமே தனி தான்! பல முறை என் தாயோ தந்தையோ உணவுகளை உருட்டி எங்களுக்கு கொடுத்து தாங்கள் சாப்பிடாமலே பட்னி இருப்பார்கள் என்பது எங்களுக்கு அப்போது தெரியாது!

ஞாயிறுக்கிழமைகளில் எங்கள் வீட்டில் எப்போதுமே கொண்டாட்டம் தான். எல்லோரும் சேர்ந்து சீட்டாடுவோம். அல்லது கேரம்,  தாயக்கட்டை, ‘ட்ரேட்’ என்று ஏதாவது விளையாடுவோம். சண்டைப் போடுவோம். சில சமயம் இதனால் மூன்று அல்லது நான்கு நாட்கள் கூட பேசாமல் இருந்தது உண்டு. என்றாலும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்க மாட்டோம். மிக ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும், எவ்வித கஷ்டம் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமலும், யார் வந்தாலும் இனிமையோடு வரவேற்றும் வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. அதனால் தான் நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், என் பெற்றோர்களையும் என்னுடனே வைத்துக் கொண்டு விட்டேன். நான் ஆஸ்திரேலியா வந்த போது கூட, என்னுடன் விமானம் ஏறியவர்கள் தான் அவர்கள். இதை சில பேர் கேலி செய்ததும் உண்டு. ஆனால் என்னால் அவர்களைத் தனித்து விட்டு இருக்க முடியவில்லை. அப்படி ஒரு பாசப்பிணைப்பில் நான் வளர்ந்து விட்டேன்.

குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நிலையில் ஏன் என்னிடம் இந்த ஏக்கம் உள்ளது? இந்த உணர்வு எப்போதிலிருந்து தோன்றியது? யோசிக்க ஆரம்பித்தேன்.

ஆஸ்திரேலியாவிற்கு வந்து இரண்டு வருடக்காலம் இரவு பகல் என்று உழைக்க ஆரம்பித்தேன். மணிக்கு டாலர் என்பதால், வெகு விரைவிலேயே டாலரைச் சேர்த்து புது வீடு பாங்க் கடனுடன் கட்டினேன். ஆளுக்கு ஒரு அறை என்று கணக்கிட்டு, இந்திய வீட்டைப் போல் மாற்றி கட்டினேன். அது வரையில் என் எண்ணம், நேரம் எல்லாம் சம்பாதித்து பாங்க் கடனை அடைக்க வேண்டும் என்று இருந்ததால், தனிமையோ ஏக்கமோ ஏற்ப்பட்டது கிடையாது. சொல்லப்போனால் அப்போதெல்லாம் தனிமைக்காக ஏங்கியதும் உண்டு. புதிய வீட்டிற்கு வந்தவுடன் தான் இந்த மன உளைச்சல் ஆரம்பமாகியது. வேலையிலும் சற்று மாற்றம் ஏற்பட, இப்போது அதிக நேரம் வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தேன். இதனால் முதலில் தனிமையை உணர முடிந்தது. அவரவர்கள் அவர்கள் வேலைகளை செய்துக்கொண்டிருந்தார்கள். நானும் என்னுடைய பொழுது போக்கிற்காக, தோட்ட வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். அப்போதிலிருந்து தான் இந்த மன உளைச்சலும் ஆரம்பித்தது. விவரிக்க முடியாத தனிமை. ஏதோ ஒரு வித குற்ற உணர்ச்சி. ஏதையோ ஒன்றைத் தொலைத்து விட்டதுப் போன்று உணர்வு.

சமீப காலமாக இவ்வுணர்வு அதிகரித்துவிட்டது. காரணம் வயதானதற்கான அறிகுறியோ அல்லது நீடிக்கும் தனிமையோ? தனிமையில் இருக்கும் போது ஆயிரமாயிரம் கற்பனைகளில் மூழ்கிவிடுகிறோம். இதனால் சில சமயம் நாம் ஏதோ குற்றம் செய்துள்ளோம், அந்த குற்ற உணர்ச்சி தான் நம்மை வாட்டுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தனைக்கும் நான் புத்தர் போன்றோ, காந்திப் போன்றோ வாழ்ந்தது கிடையாது. சராசரி மனிதன் போல் தான் வாழ்ந்துள்ளேன். என் வாழ்க்கையில் எல்லாம் நன்மையே செய்து நேர்மையாக வாழ்ந்தவன்அல்ல; நான். பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளேன்., சிலரை வேலையிலிருந்து அதிக காரணமில்லாமல் நீக்கியும் உள்ளேன். இதை தவறு என்று சொல்லலாம். ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் அந்த சூழ்நிலையில் அது ஒன்றே சிறந்த வழியாக இருக்கலாம். இதனால் தானோ என்னவோ ஒரு குற்ற உணர்ச்சியை உணர்கிறேன்? இதேப்போல் கூடப்பிறந்தவர்களுடனோ என் மனைவி மக்களுடனோ பகைத்துக்கொண்டதும் உண்டு.

இதோ இன்னமும் என் சகோதரன் சிறு வயதில் கடையில் சென்று மிட்டாய்களை வாங்கி வேண்டுமென்றே எனக்கு கொடுக்காமல் மற்றவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தது ஞாபகம் உள்ளது. இதற்காக அவனுடன் சண்டைப் போட்டதுன்டு. அதே சகோதரன் “டைபாயிடில்” படுத்திருக்கும் போது, இறைவா, என் உயிரை எடுத்துக்கொண்டு அவனை பிழைக்க வைக்க கூடாதா என்று அழுத காலமும் உண்டு. பலமுறை என் மக்களுடன் சண்டைப் போட்டதுண்டு. என்னுடைய அன்பையும் ஆதங்கத்தையும் அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று பல முறை அவதிப் பட்டதும் உண்டு. என் மனைவியுடன் பல முறை கோபித்துள்ளேன். அவளும் மாறாக எதிர்த்துப் பேசியும் உள்ளாள். ஆனால் என் அன்பு மாறினதாகவோ அல்லது குறைந்ததாகவோ கிடையாது. இதை அவளுக்கு புரிய வைக்கவும் தெரியவில்லை. இப்படித்தான் போன வாரம் ஒரு சண்டையே உருவானது. என் மகள் வந்து, வீட்டிற்கு தாழ்வாரம் எழுப்ப வேண்டும் என்றும் $5000 தேவை யென்றும் கேட்டு வாங்கிக் கொண்டு போனாள். உடனே என் மனைவி “நீங்கள் ஏன் அவளுக்கு கொடுக்கறீர்கள்? அவளும் அவள் கனவனும் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். உங்களை வேண்டும் என்றே கேட்டு வாங்கிக் கொள்கிறாள். இத்தனைக்கும் அவள் பாங்கில் நிறையவே சேர்த்து வைத்திருக்கிறாள் தெரியுமோ? உங்களை நன்றாக ஏமாற்றி மொட்டையடிக்கிறாள். நீங்களும் அருமைப் புதல்வி என்று கொடுத்து விடுகிறீர்கள்”.  என்று திட்ட ஆரம்பித்தாள். நானும் பதிலுக்கு ஏதோ கூச்சலிட்டு விட்டேன். இதையெல்லாம் நான் செய்த தவறாக கருதலாமா? இது ஒவ்வொரு வாழ்க்கையிலும் நடப்பதுதான் அல்லவா? அல்லது அப்படி நான் தான் கற்பனை செய்துக்கொண்டிருக்கிறனா? நான் செய்தது குற்றம் என்றால், என் மனைவி மறு நாளைக்கெல்லாம், என் மூத்த மருமகள் வர, அவளை அழைத்துக்கொண்டு, “ஷாப்பிங் மாலு”க்கு சென்று, கிட்டதட்ட $2000த்திற்கு, அவளுக்கு வளையல்களும், பிறக்க போகும் குழந்தைக்கு தொட்டிலும், பொம்மையும் வாங்கி கொடுத்துள்ளாள். இதை எப்படி விவரிப்பது? அப்படியானல் அவளுக்கு மட்டும் பையனும் அவன் மனைவியும் அருமையில்லையா? நான் மட்டும் தான் ஒரு பக்கமாக நடந்துக்கொள்கிறேனா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதில் நான் செய்த குற்றம் தான் என்ன? என்னை வாட்டும் இந்த உணர்விற்கு என்னதான் காரணம்?

மேற்கிலிருந்து பருவ காற்று சில்லென்று வீசி, என் உடலை தழுவிக்கொண்டு சென்றது. அதனாலோ அல்லது காலையிலிருந்து ஈமக்கடன்களை செய்த களைப்போ, என்னையும் அறியாமல் தூங்கிவிட்டேன். கடைசியாக, என் எட்டு மாத கர்பினி மருமகளை மட்டும் நினைத்துக்கொண்டு, “ஆண்டவா, மூன்று வருடம் கழித்து உண்டாகியிருக்கிறாள். எந்தவித குறையும் இல்லாமல் அவள் கருத்தறிக்க வேண்டும்”, என்று உள்ளூர பிரார்த்தித்தது மட்டும் நினைவில் இருந்தது. எவ்வளவு நேரம் தூங்கினேன் என்றுத்தெரியாது. கார் வந்து நிற்கும் சத்தமும், அதைத்தொடர்ந்து வீட்டுக்கதவை சாவிப்போட்டு திறக்கும் சத்தமும் கேட்டது. என் கடைசி மகன் ராமு “ட்யூடி” முடிந்து வந்துவிட்டான். அவனிடம் மாற்றுச்சாவி உண்டு. மெல்ல எழுந்திருக்கலாமா என்றுப்பார்த்தேன். கண்கள் திறக்க மறுத்தன. சரி, இன்னம் சிறிது நேரம் தூங்கலாம், என்று இருந்து விட்டேன்.

என் மகன் உள் வந்து நேரே அவன் அறைக்கு செல்வதை உணர்ந்தேன். நான் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு எழுப்ப வேண்டாம் என்று நினைத்துவிட்டான் போல் உள்ளது. அவன் சுபாவமே அவ்வளவுதான். யாரையும் தொந்திரவு செய்யமாட்டான். தான் உண்டு தன் காரியம் உண்டு என்று நினைப்பவன் அவன். உள்ளே சென்றவன் சற்று நேரத்திர்க்கெல்லாம் சமயலறைக்கு வந்தான். என் மனைவி சொன்ன “பக்ஷ்ணம்” ஞாபகம் வந்தது. அதைப்பற்றி சொல்ல எண்ணினேன். ஆனால் ஏனோ சொற்கள் வரவில்லை. அரைகுறை தூக்கத்தில் இருக்கிறேன் போல்! எந்த உணர்வும் சரியாக  இல்லை. ஆனால் இது கணவாகவும் தெரியவில்லை. பகலில் நேரில் நடப்பதுப் போல் கணவு காண முடியுமா என்ன? என்ன விசித்திரமான உணர்வுகள் இது?

என் மகன் இதோ காபி போட “காபி மெஷினில்” தண்ணிர் ஊற்றுவதும், ஃபில்டரில் காபி போடும் சத்தமும் தெளிவாக கேட்கிறது. இதை எப்படி கணவு என்று சொல்ல முடியும்? என் மகன் “டைனிங் டேபில்” சேரை இழுக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து அவன் உட்காருவதையும் உணரமுடிகிறது. (உட்காரும் சத்தம் கேட்க வில்லையாயினும் யூகிப்பது கடினமில்லை யல்லவா? பலமுறை இப்படித்தானே காதில் கேட்பதையும், பார்ப்பதையும் வைத்து சிலவற்றை யூகிக்கிறோம்?)

என் அத்தைச் சொல்வாள், “டேய், ராமு காபி போட்டால், மூன்று வீட்டுக்கு மணக்கும். அவன் போடும் காபியை சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும். காபி சாப்பிடாதவர்கள் கூட, கொஞ்சம் கொடு சாப்பிட்டு பார்க்கிறேன் என்பார்கள்!” இத்தனைக்கும் ஒரு முறை தான் அவள் சிட்னிக்கு வந்துள்ளாள். ஆனாலும் என்னிடம் எப்போது போனில் பேசினாலும், ராமுவின் காபியைப் பற்றி சொல்லாமல் இருக்கமாட்டாள்.

எதற்காக இதை கூறுகிறேன் என்கிறீர்களா? ராமுவின் கைவண்ணத்தின் தனி மதிப்பு அது. இதற்காகவே தனியாக வருத்த காபிக் கொட்டையை தேர்ந்தெடுத்து வாங்கி வருவான். இரண்டு நாளுக்குத் தேவையான பொடியை மட்டும்தான் மெஷினில் அறைத்துக் கொள்வான். இல்லாவிட்டால் வாசனை போய்விடுமாம். அதேப் போல் காபி மெஷினை துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்வான். யாரையும் தொட விடமாட்டான். அதனால் தான் என் அத்தை மட்டும் அல்ல, வீட்டிற்கு யார் வந்தாலும், அவன் காபியை புகழ்ந்து விட்டு போவார்கள். ஆனால் இன்றுப் பாருங்கள், காபியின் மணம் என் நாசிக்கு எட்டவில்லை! ஒரு வேலை அவன் காபி மெஷினை “ஆன்” செய்யவில்லையா? அப்படி இருக்காதே! தண்ணீர் கொதிக்கும் சத்தம் கேட்டதே. என்ன விசித்திரம் இன்று? எனக்குத்தான் என்ன ஆகிவிட்டது? கணவுகளில் தான் முகரும் உணர்வை அறிய மாட்டோம் என்பதை எங்கேயோ படித்தது ஞாபகம் வந்தது. ஒரு வேளை இன்னமும் கணவுகளில் தான் இருக்கிறேனா?

இது கணவா அல்லது நினைவா? அல்லது இரண்டும் கலந்த உணர்வா? ஒரு வேளை தனிமை உணர்வில் ஏதேதோ கற்பனை செய்துக்கொண்டிருக்கிறேனா? முதலில் இந்த தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டும். இதனால் வரும் விபரிதம் தான் என் சிந்தனையை சிதற அடிக்கிறது.

மெல்ல எழுந்திருக்க காலை மடக்க முனைகிறேன். (சாய்வு நாற்காளியில் காலை நீட்டிப் படுத்திருப்பதால், எழுந்திருக்கும் முன் கால் வைத்திருக்கும் மடக்கு பலகையை மடக்க வேண்டும்). கால் பாரமாக இருந்தது. அசைக்க முடியவில்லை. மீண்டும் தூக்கத்தில் இருக்கிறேனோ? கண்ணைத் திறக்க முயன்றேன். இமைகள் திறக்க மறுத்தன. பலமுறை இப்படி கணவு வரும். அதுவும் பகல் வேலையில் தூங்கும் போதுதான் இப்படி கணவு வரும். சரி, நம் கணவு இன்னமும் முடியவில்லை போல் என்று நினைத்துக் கொண்டேன். இனி படுத்திருக்க முடியாது. இதுவே ஒரு குற்ற உணர்வாக மாறும். எழுந்திருக்க வேண்டியதுதான். என் மூளைக்கு செய்தி அனுப்பிவிட்டேன். கண்ணைத் திறந்து எழுந்திருக்க முடிவு செய்தேன். என்னவாயிற்று இன்று? ஏன் என் உடல் உறுப்புகள் இயங்க மறுக்கின்றன? போகட்டும். களைப்பு போலும். இன்னும் சிறிது நேரம் கழித்து எழுந்திருக்கலாம். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. காலை மீண்டும் மடக்க நினைத்தேன். இலேசாக அசைவது போல் இருந்தது. என் வலு அத்தனையும் கொண்டு ஓங்கி உதறினேன். சிறிதே அசைந்தது போல் உணர்ந்தேன். மற்ற எந்த உறுப்புகளும் அசைய மறுத்தன. என் பிரயத்தனங்கள் அத்தனையும் வீணான!

என்னை சுற்றி ஒரே சத்தம். நடுவில் அழும் குரல் வேறு. யார் குரல் என்று தெரியவில்லை. ஆங்கில குரல் வேறு கணீர் என்று ஒலிக்கிறது. எதுவோ வீட்டில் நடந்துள்ளது. ஆனால் என்னால் எழுந்திருக்க முடியவில்லை. கண் இமைகள் கூட திறக்க மறுத்தன. கணவா நிணைவா என்று சரியாக கூறமுடியவில்லை. பேச்சுக் குரல்களும் சரியாக புரியவில்லை. ஆங்கிலம், தமிழ் இரண்டும் ஒலிப்பது போல் தோண்றுகிறது. உற்றுக் கேட்க முயற்சித்தேன்.

என் பக்கத்து வீட்டுக்காரன் ஒரு ER அதாவது அவசர சிகிச்சை செய்வதற்கு பயிற்சி பெற்றவன். ஆம்புலன்ஸ் பிரிவில் வேலைப் பார்ப்பவன். ஒரு ஆஸ்த்திரேலியன். அவன் குரல் நன்றாக கேட்டது. ஆனால் அவன் பேசுவது புரியவில்லை. அவன் ஏன் இங்கு வர வேண்டும்? யாருக்கு என்னவாயிற்று? ஒரே குழப்பமாக இருந்தது. இந்த உடலுக்கு தான் என்னாவாயிற்று? இன்றைக்கென்றுப் பார்த்து இப்படி இயங்க மறுக்கிறதே! சட்டென்று பொறித்தட்டியது. என்னை சுற்றியே எல்லாரும் இருப்பது போல் உணர்கிறேன். எனக்கு தான் ஏதோ ஆயிற்று என்று நினைத்து விட்டார்களா? அதனால் தான் பக்கத்துவீட்டுகாரனை அழைத்து வந்தார்களா? அடடா அதிகமாகவே தூங்கிவிட்டேன் போல. பாவம் எல்லாரும் பயந்துவிட்டார்கள். ‘இதோ, இப்பவே, இப்படியே எழுந்து விடுகிறேன். பயப்படாதீர்கள்’. உரத்த குரலில் கூறினேன். வாய் அசைய மறுத்தது. ஒலி ஒலிக்வில்லை. என்னவாயிற்று? வாயும் சதி செய்கிறதோ? கடைசியாக கண்களை திறக்க முயன்றேன். முடியவில்லை. இது என்ன நிலை? கணவும் இல்லாமல் நினைவும் இல்லாமல்? என்னை சுற்றி நடப்பதுயாவும் துள்ளியமாக உணர்கிறேன். கேட்கிறேன் – பொருள் விளங்கவில்லை என்றாலும்! பார்க்க முடியவில்லை. உடலை அசைக்க முடியவில்லை. என்னை சுற்றி இருப்பவர்களுக்கு எதாவது குறிப்புணர்த்த வேண்டும் என்றாலும் முடியவில்லை. இப்படி ஒரு கணவை (ஆம் கணவாக தான் இருக்க வேண்டும்) முதன் முறையாக உணர்கிறேன்.

ஏதேதோ என்னை சுற்றி நடக்கிறது. எவ்வளவு காலம் கழிந்தது என்று தெரியவில்லை. இது இரவா பகலா? புரியவில்லை. கடைசியாக என்ன செய்தேன்? மறந்து விட்டது. என் மருமகள் என் கால்களை தொடுவதை உணர்கிறேன். பொதுவாகவே காலை தொடுவது என்பது எனக்கு பிடிக்காத ஒன்று. அதுவும் கர்ப்பினி பெண் இவள். ஏன் என் காலை தொடுகிறாள்? பக்கத்தில் இருப்பவர்கள் ஏன் தடுக்கவில்லை? சரி, நான் தான் தடுக்கலாம் என்றால் ஏன் என்னால் முடியவில்லை? என்னதான் நடக்கிறது இங்கே? எங்கே என் மனைவி? என் இரண்டு மகன்களும் எங்கே போய் விட்டார்கள். சத்தம் மட்டும் கேட்கிறது. யார் யார் குரலோ. ஒன்றும் புரியவில்லை. நான் என் வீட்டில் தானே இருக்கிறேன்? ஏன் அனைத்தும் மறந்து விட்டன? என்னதான் ஆயிற்று எனக்கு? கடைசியாக எப்போது தூங்கினேன்? ஏன் இது கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை? மதியத் தூக்கமா? இரவுத்தூக்கமா? இப்போது பகலா இரவா? எழுந்திருக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை. ஒலி கேட்கிறது ஆனால் புரியவில்லை. சில வற்றை உணர்கிறேன். இது எப்படி சாத்தியம்? இப்படித்தான் ஊனமுற்றோர்கள் உணர்கிறார்களோ? எனக்கு நினைவு தப்பி ‘கோமா’ வில் இருக்கிறேனோ?

மெல்ல மெல்ல என் உணர்வுகளையும் இழக்க தொடங்கினேன். நினைவுகளும் மெள்ள மறைகின்றன. சில்லென்று ஒரு புதுவிதமான உணர்வு என் உடல் முழுதும் பாய்ந்தது. இது குளிரல்ல. குளிரோ காற்றோ அடித்தால் உடல் தோல் சிலிர்க்கும். சட்டென்று போர்வையை போர்த்துக் கொள்ளத் தோன்றும். ஆனால் இது அத்தகையதன்று. உடல் மீது எதுவும் உண்ரந்ததாக தெரியவில்லை. உடல் உள்ளுக்குள் ஒரு வெப்பமற்ற தன்மையை உணர்ந்தேன். இது இதமாகவே இருந்தது. உடல் பாரம் அணைத்தும் குறைந்தது போல் இருந்தது. சிலிர்த்து எழுந்தேன். அட, இப்போது எழ முடிகிறதே. ஆனால் ஏன் இவ்வளவு இலேசாக உள்ளேன்? புவியீர்ப்பு என்னை ஈர்ப்பதாகவே தெரியவில்லையே! பறவையாக இருந்தாலும் கூட சிறகடித்து தானே பறக்கமுடியும்? ஆனால் எப்படி என்னால் காற்றில் மிதக்க முடிகிறது?

கீழே பார்க்கிறேன். மங்களாக ஒரு உடல் தெரிகிறது. சுற்றி பலர். ஒரு முகமும் அடையாளம் தெரியவில்லை. ஆனால் இப்புது உணர்வு எனக்கு பிடித்திருக்கிறது. மரத்தின் மேலிருந்து உதிரும் ஒரு இலை எப்படி காற்றில் அசைந்து அசைந்து மிதக்குமோ அப்படி இருந்தது எனக்கு. நானும் இப் பூமியிலிருந்து உதிருகிறேனோ? மெல்ல மெல்ல மிதக்கிறேன். மேலே செல்கிறேனா அல்லது கீழே போகிறேனா? உடல் இருந்தால் தானே இதை உணர்வதற்கு? பின் எப்படி பார்க்க முடிகிறது? உண்மையில் பார்க்கிறேனா அல்லது உணர்கிறேனா – கணவுகளில் வருவது போல? மெல்ல மெல்ல அணைத்தும் மறைகிறது. நான்தான் வெகு தூரம் வந்து விட்டேனா அல்லது என்னைச் சுற்றி இருந்தவைதான் மறைந்து விட்டனவா? தெரியவில்லை. என்னைப் பொருத்த வரையில் நான் மிதக்கிறேன்.

இருள். நீங்கள் நினைப்பது போன்று சாதாரணமான இருள் அன்று. ஒரு சிறிய ஒளிக்கூட கிடையாது. ‘Black Hole’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். இத்தகைய கருவோட்டையின் புவியீர்ப்புத் தன்மையால் ஒளிக்கற்றைக்கூட வெளிசெல்ல முடியாது என்று படித்திருக்கிறேன். அத்தகைய இடத்தில் உள்ளேனா? எப்படி தெரிந்துக்கொள்வது – உணர்வற்ற தன்மையின் நிலையில் இருக்கும்போது? யோசிக்கிறேன். ஆனால் ஒன்றும் நினைவில் இல்லை. கடைசியாக பார்த்த உடல் மங்களாக ஞாபகமிருந்தது. ஒரு வேளை அந்த உடலில் தான் என் நினைவுகள் உள்ளனவோ? ஒரே ஒரு உருவம் மட்டும் உணரமுடிகிறது. அவ்வுருவம் என் காலை தொடுகிறது. இது மட்டும் என் நினைவலைகளில் எப்படி உள்ளன?

அண்டகோலங்கள் உள்ள வானவீதி. இங்கு கோலங்களை விட வெற்றுவெளி அதிகமாக உள்ளது என்றால் நம்பமுடியவில்லை! அதுவும் வெற்றுக்-காலம் பிணைந்த ஒருவித வெளி. காலம் அல்லது நேரம் இங்கு கிடையாது. ஒருதிடப்பொருள் இவ்வீதியில் கிடக்கும் போது, அது ஏற்படுத்துகின்ற புவியீர்ப்பு தன்மையின் சக்தியைப் பொருட்டு காலம் மாறுகிறது. இது விஞ்ஞானத்தில் படித்திருக்கிறோம். திடப் பொருளும் அல்லாமல், திரவப்பொருளும் அல்லாமல், ஏன் வாயுக்கூட இல்லாமல் இருக்கும் எனக்கு, புவியீர்ப்புத் தன்மை கிடையாது. ஆதலால் காலம் நிரந்திரமாக உள்ளது. எவ்வளவு நேரம் எவ்வளவு காலம் இப்படி இவ்வான வெளியில் உளவுகிறேன் என்று தெரியவில்லை.

எவ்வித உணர்வுகளும் இல்லாமல், வெற்றுக்-காலம் (Space-Time) அல்லது கருவோட்டையிலோ நான் அலைகிறேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே ஒரு முகம் மட்டும் நினைவளைகளில் உள்ளது. மறக்க முடியாது. மீண்டு இவ்வுருவத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா? நேரமே இல்லாத இவ்விடத்தில் எவ்வளவு காலம் உள்ளேன் என்பதை எந்த அளவுக்கோல் மூலம் அளப்பது. பூமியின் நேரத்தை அளவுக்கோளாக பயன்படுத்தினால், நான், இன்றும், இப்போதும் அப்படியே உள்ளேன். என் நேரம் முன் செல்லவில்லை. எனக்கு பூமியை விட்டு வந்து ஒரு வினாடி கூட ஆகவில்லை. ஆனால் பூமியின் நாட்கள் நகர்ந்து விட்டன. நாட்கள் பல கடந்து, மாதங்களாகிவிட்டன. அவையும் கடந்து செல்கின்றன.

திடீரென்று ஒரு வெளிச்சம். சூரியனுக்கு அருகில் வந்துவிட்டேனா? எப்படி இவ் வெளிச்சத்தை உணரமுடிகிறது. அட என் உடல், ஆம் என் உடல் என்னோடு சேர்ந்துவிட்டது. முதன்முறையாக ஒருவித கதகதப்பை உணருகிறேன். சற்றே குளிருவது போல் உள்ளது. கால்களை அசைக்கிறேன். கால்கள் அசைகின்றன. என் உணர்வுகள் வர தொடங்கிவிட்டன. அப்படியென்றால் என் நிணைவுகளும் வந்து விடுமல்லவா? நான் யார்? எங்கு இருக்கிறேன்? இந்த உடலில் தானே அவை இருக்க வேண்டும்? தேடுகிறேன். ஒன்றும் ஞாபகம் வரவில்லை. சட்டென்று வானத்தில் மிதக்கிறேன். இருங்கள், இது முன் போன்று அன்று! இப்போது புவீயீர்ப்பை உணர முடிகிறது. அப்படியானால் இது எப்படி சாத்தியம்? அல்ல. நான் காற்றில் மிதக்கவில்லை. என்னை யாரோ தூக்குகிறார்கள். அட அப்படி யாரது என்னை தூக்கும் அளவிற்கு வலிமையானவர்? கண்ணை திறந்து பார்க்கிறேன். இப்போது கண்களை நன்றாகவே திறக்க முடிகிறது. வெளிச்சம் கண்களை கூச, கைகளால் கண்களை கசக்குகிறேன். என்னை தூக்குபவர் ஒரு நடுத்தர வயதானவள். வெள்ளை உடை அனிந்துள்ளாள்.  ஆனால் என்னை விட ஐந்து மடங்கு பெரியவள். இராட்சசி. ஐயகோ இது என்ன கொடுமை! நான் எங்கே வந்து மாட்டிக்கொண்டேன்? மனம் பதப்பதைத்தது. கத்த வேண்டும் போல் தோன்றியது. என் சக்தி அனைத்தையும் திரட்டி கத்தினேன். என் குரலை எனக்கே கேட்கவேண்டும் போல் தோன்றியதால், என் வீரியம் அனைத்தயும் குரலில் காட்டினேன். ‘வீல்’ என்ற கீச்சுக் குரலில் சத்தம் எழுந்தது. சுற்றிப் பலர் இருந்தனர். எல்லோரும் என் குரலைக்கேட்டு சிரித்தனர். ஓஹோ இவர்கள் என்னை சாப்பிட போகிறார்களா? யாருடைய முகமும் தெரிந்த முகமாக இல்லாவிட்டாலும், அனைவருமே இராட்சகர்ப் போல் பயங்கரமாக இருந்தனர். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. காற்றுவெளியில் சுதந்திரமாக திரிந்த நான், எப்படி இவ்வுலகில் வந்து மாட்டிக்கொண்டேன்? முதன் முறையாக அழுதேன். என் வலிமை அத்தனையும் அழுகையில் வெளிப்பட்டது. எனக்கு ஏன் இப்படிபட்ட ஒரு சோதனை?

என்னை தூக்கியவள், யாரிடமோ ஒப்படிக்கிறாள். இது யார் புதிதானவள்? இவள் என்னை என்ன செய்யப்போகிறாள். மீண்டும் கத்துகிறேன். யாரும் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அழுகையின் ஊடே புதியவளை கவணிக்கிறேன். இது…தெரிந்த முகமாக அல்லவா உள்ளது. காற்று வெளியில் என் நினைவைவிட்டு நீங்காதிருந்த முகமல்லவா இது? ஆனால் இவள் எப்படி இங்கே வந்தாள்? இவள் ஏன் இவ்வளவு பூதாகரமாக இருக்கிறாள்? அவள் என்னை அப்படியே அணைத்து நெற்றியில் முத்தமிடுகிறாள். அவள் கண்களில் ஒரு வித பாசத்தையும் அன்பையும் பார்த்தேன். இந்த உலகம் எது என்று தெரியவில்லை. இவர்கள் பேசும் மொழி புரியவில்லை. ஆனால் இது தான் என் இருப்பிடம். இதோ என்னை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாளே, இவள் என்னை பாதுக்காப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு பிறக்கிறது. இவள் இருக்கிறவரையில் எனக்கு பயமில்லை. இவளை நன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும். என் கைகள் அவள் உடையை பற்றிக்கொண்டன. என் அழுகை குறைந்தது. ஒரு நம்பிக்கை பிறந்தது. புதிய உலகில், புதிய மனிதர்களுடன் என் பயணத்தை தொடங்க ஆயத்தமானேன்.

பி.கு: இறக்கும் தருவாயில் ஒருவன் யாரை அல்லது எதை நினைக்கிறானோ அங்ஙனமே அடுத்த பிறவியில் பிறக்கிறான். “நாராயணா” என்று என்னை நினைப்பின், அடுத்த பிறவியே இல்லாமல் என் திருவடிகளை வந்தடைகிறான். – பகவத் கீதை.

Posted on 6th January 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *